கிம் யோ ஆட்சிக்கு வந்தால் முன்னர் இருந்த கிம் ஜாங் ஆட்சியை விட மிகவும் கொடூரமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாகி ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கிம் ஜாங் உடல் நிலையில் முன்னேற்றம் அடையவில்லை என்றால் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம் யோ ஆட்சிக்கு வந்தால் 8 ஆண்டு காலம் கிம் ஜாங் நடத்திய ஆட்சியை விட மிக கொடூரமான ஆட்சியாக இருக்கும் என ஆய்வாளர் நடாஷா லிண்ட்ஸ்டேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் தம்மை யார் எதிர்த்தாலும் அவர்கள் மீது எந்த இரக்கமும் காட்டுவதில்லை, அது சொந்த உறவினர்கள் ஆனாலும் மிகவும் கடுமையாகவே நடந்து கொள்வார். அப்படிப்பட்ட கிம் ஜாங் ஆட்சியை விட அவரது சகோதரி கிம் யோவின் ஆட்சி மிகவும் கொடூரமானதாக இருக்க கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். நவீன ஆயுதங்கள் மீது அதிக அளவு மோகம் கொண்ட கிம் யோ, வடகொரியாவின் அடுத்த தலைவராக தன்னை தயார் படுத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிம் குடும்பத்தாரை அங்குள்ள மக்கள் கடவுளுக்கு நிகராகவே பார்க்கிறார்கள். எனவே பெண் என்பதால் வடகொரிய ஆளும் வர்க்கம், கிம் யோவை புறக்கணிக்காது எனவும் நடாஷா குறிப்பிடுகின்றார். கிம் யோ ஆட்சிக்கு வந்தால், தற்போது கிம் ஜாங் எவ்வாறு பார்க்கப்பட்டு வருகிறாரோ அதேப்போன்ற நிலையில் கிம் யோவும் பார்க்கப்படுவார். அது மட்டுமின்றி, கிம் ஜாங் உலக நாடுகளை எதிர்நோக்கியதை விட கிம் யோ மிகவும் கடுமையாகவே நடத்த வாய்ப்புள்ளதாக நடாஷா தெரிவிக்கிறார். கணினி அறிவியல் பட்டதாரியான கிம் யோ, சமீப காலமாக சகோதரருக்கு உதவியாக அரசு அலுவல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
சுவிட்சர்லாந்தில் தமது 9-வது வயதில் இருந்தே கல்வி பயின்ற கிம் யோ, வடகொரியாவுக்கு திரும்பிய பின்னர் பல்கலைக்கழக படிப்பை முடித்தார். கிம் யோ தொடர்பில் தெரிந்து வைத்துள்ள கிம் ஜாங் மனைவி ரி சோல் ஜூ, நிச்சயமாக ஆட்சியை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கமாட்டார் என்று கூறப்படுகிறது. வடகொரியாவில் இதுவரை ஆயுத குவிப்புகளுக்கு காரணம் கிம் யோ என நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டதோடு கிம் யோ உண்மையில் அவரது தாத்தா மற்றும் தந்தையை விட கொடூர புத்தி கொண்டவர் எனவும், அது கிம் ஜாங் மட்டுமே தெரிந்து வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.