நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு பணியில் உள்ள அனைத்து துறை களப்பணியாளர்களுக்கும் வைட்டமின், ஸிங்க் (zinc) மாத்திரைகள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம் என பரிந்துரைத்துள்ள தமிழக அரசு , நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான மருந்து அல்ல, எதிர்ப்பு சதிக்காக மட்டுமே என விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க தமிழக சுகாதார துறை நேற்று பரிந்துரை செய்தது.
இது தொடர்பான அறிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டார். அதில் , கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு மருந்தினை கொடுக்க தமிழக சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.
அதன்படி 180 மி.கி, வைட்டமின் சி, மல்டி வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது என கூறப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் உள்ள அனைத்து துறை களப்பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் , விட்டமின் ஸிங்க் (zinc) மாத்திரைகள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஸிங்க் (zinc) மாத்திரைகள், மல்டி வைட்டமின் மாத்திரைகள் நாளை முதல் 10 நாட்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.