கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணம் அடைந்ததை தொடர்ந்து இன்று பணிக்கு செல்ல உள்ளார்
கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல நாடுகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவ்வகையில் இங்கிலாந்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததன் விளைவாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இதனிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு சிகிச்சை முடிந்து குணமடைந்த போரிஸ் ஜான்சன் வீடு திரும்பியுள்ளார். இல்லத்தில் ஒரு வார காலம் ஓய்வு எடுத்து வந்த போரிஸ் ஜான்சன் இன்று தனது பணிக்கு மீண்டும் போகவுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தனது பணிகளை தொடர்வது குறித்தும் இனி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக் ராப் மற்றும் ரிஷி ஆகியோருடன் மூன்று மணிநேர ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.