கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய தங்கள் நிலத்தை எடுத்துக்க பள்ளி மாணவி பிரதமருக்குக் கடிதம் எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி கொரோனா தொற்று பாதித்து இறந்தவர்களை புதைப்பதற்கு அவர்களது விவசாய நிலத்தை எடுத்துக்கொள்ளுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது. மதுரையில் ஒரு பகுதியான வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தென்னரசி என்ற மாணவி இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை தடுத்து மக்களை காப்பாற்ற தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை உலக சுகாதார மையம் பாராட்டி வருகின்றது.
தமிழ்நாட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நம்மை பாதுகாக்கும் காவல் அதிகாரிகளுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுகின்றது. நமக்காக உதவி செய்யும் அவர்கள் மரணமடைந்தால் அவர்களை அடக்கம் செய்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சுயநலமின்றி நமது நலனுக்காக தொண்டாற்றும் பலர் இதன் காரணமாக வேதனை அடைந்துள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.