ஆந்திரப்பிரதேசத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,892ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், அதன் தாக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 3ம் கட்ட சமூக பரவலுக்கு செல்வது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும் நாளுக்குள் நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரப்பிரதேசத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,177 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கர்னூலில் 292, குண்டூரில் 237, கிருஷ்னா மாவட்டத்தில் 210 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் கொரோனா தடுப்புப்பணிகள், மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது ஆகியவை பற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.