கொரோனா வைரஸ் பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கொரோனாவால் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள நாடு தழுவிய ஊரடங்கு இன்னும் 6 நாட்களில் முடிவடைய உள்ளது.
கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிரதமர் மற்றும் முதல்வர்கள் ஆலோசனை ஏற்கனவே, மார்ச் 20, ஏப்ரல் 2 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இன்று நான்காவது முறையாக கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்ககளின் நிலைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கை மே 16-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநில அரசுகள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற இருப்பதாக தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் ஏற்கனவே மே 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பிரதமருடனான வீடியோ சந்திப்பின் போது ஏழு மாநிலங்களுக்கு மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டுள்ளதால், மாநில தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.
கடந்த முறை நடந்த உரையாடலில் கேரளாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது முதல்வருடன் பேசாத அனைத்து மாநிலங்களும் தாங்கள் சொல்ல விரும்புவதை எழுத்துப்பூர்வமாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, இன்றும் 7 மாநிலங்களுக்கு மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளா சார்பில் கலந்துகொண்ட தலைமைச் செயலாளர் தங்களது பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளார்.