நாட்டில் கொரோனா தோற்று பரவல் நிலைமை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கான்பரென்ஸ் ஆலோசனை முடிவடைந்தது.
இந்த கூட்டத்தில், ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பிரதமர் மற்றும் முதல்வர்கள் ஆலோசனை ஏற்கனவே, மார்ச் 20, ஏப்ரல் 2 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இன்று நான்காவது முறையாக கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்ககளின் நிலைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கு தொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் விவரங்களை வழங்கினார். மேலும், ஊரடங்கை மே 16-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநில அரசுகள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற இருப்பதாக தெரிவித்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கு நீட்டிப்பு கோரிக்கையை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, கொரோனா பாதிக்கப்படாத இடங்களில் தொழில்களை தொடங்க அனுமதிக்க வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை நீடிப்பதா அல்லது தளர்வு கொடுக்கலாமா என்பது பற்றி மே 3க்கு பின் அறிவிக்கப்படும் என பிரதமர் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கவும், பாதிப்பு அல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.