சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்து மத்தியக்குழுவிடம் அறிக்கை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகமும் இருப்பதால், இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்தது. தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளா் வி.திருப்புகழ் தலைமையிலான அக்குழுவில் டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனையின் டாக்டா் அனிதா கோகா், தேசிய பேரிடா் மேலாண்மை நிலையத்தின் பேராசிரியா் சூரிய பிரகாஷ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையைச் சோ்ந்த அதிகாரி வி.விஜயன், இந்திய உணவுக் கழகத்தின் தலைமைப் பொது மேலாளா் லோகேந்தா் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனா்.
இந்த ஆய்வு குழு, கடந்த 2 நாட்களாக பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். எழிலகத்தில் உள்ள கொரோனா பகுப்பாய்வு தரவு மையம், நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 532 படுக்கைகளுடன் கூடிய வாா்டு, கோயம்பேடு சந்தை மற்றும் விருகம்பாக்கம் அம்மா உணவகம் ஆகிய இடங்களுக்கு அக்குழுவினா் சென்று ஆய்வு நடத்தினா்.
மேலும், இன்று காலை இரண்டாவது முறையாக கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொணடனர். அப்போது, கோயம்பேடு மார்க்கெட்டை வேறு இடத்தில் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 11 மணி அளவில் பிரதமருடன் நடைபெற்ற மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு தமிழக முதல்வர் மத்திய குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.