Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை; மௌனத்தை களையுங்கள் – டிடிவி தினகரன் ட்வீட்!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் அரசிடம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஒரு ரேபிட் கிட் ரூ.245 என்ற ரீதியில் வாங்கி அதை அரசியம் ரூ.600க்கு விற்றதாக தெரிய வந்துள்ளது. 60% அதிக விலைக்கு விற்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை…வெளிச்சத்துக்கு கொண்டுவந்த டெல்லி உயர்நீதிமன்றம்… இனிமேலாவது கள்ளமௌனத்தை களைந்து வெள்ளை அறிக்கை வெளியிட பழனிசாமி அரசு முன்வர வேண்டும்! என டிடிவி தினகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில், குடிமராமத்துக்கு நிதி ஒதுக்குவது தொடங்கி கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவது வரை பணம் சம்பாதிப்பது மட்டுமே பழனிசாமி அரசின் குறிக்கோள்; மக்கள் நலன் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை என்ற குற்றச்சாட்டுகள் பல நேரங்களில் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் டெல்லி உயர் நீதிமன்றம் ஏப்ரல் 24ம் தேதி வழங்கியிருக்கும் ஒரு தீர்ப்பு அமைந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறியும் பிசிஆர் (PCR) கருவிகள் போதுமான அளவுக்குத் தமிழக அரசிடம் கையிருப்பு இல்லை; அதை வாங்கும் முயற்சியிலும் அவர்கள் தீவிரம் காட்டவில்லை என்ற சூழ்நிலையில்,

ரேபிட் டெஸ்ட் கிட் என்னும் கூடுதல் முறையிலாவது சோதனை செய்ய முயற்சி செய்வார்களா என்று பலரும் எதிர்பார்த்தார்கள். இதையடுத்து 50,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்து, அதில் 24,000 கருவிகள் வந்துவிட்டன. மேலும் நான்கு லட்சம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறோம் என்று தமிழக அரசின் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த நிலையில், ஏப்ரல் 18 அன்று சத்தீஷ்கர் மாநில அரசு இந்த ரேபிட் டெஸ்ட் கருவியை ரூ.337 க்கு வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியானது.

இது தொடர்பாக அதே நாளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், நமது தமிழக அரசு எவ்வளவு ரூபாய் கொடுத்து இந்தக் கருவிகளை வாங்கியது என்று கேட்டபோது கடைசி வரை பதிலே சொல்லவில்லை. சுமார் ஒரு மணிநேரம் கழித்து சில ஆவணங்களை வெளியிட்டு ஒரு கருவியின் விலை ரூ.600 மற்றும் ஜி.எஸ்.டி. 12% அதாவது ரூ 72 என ஒரு கருவியை ரூ.672 க்கு வாங்கியிருப்பதாகச் சொன்னது அரசு.

இதையடுத்து கொரோனா சிகிச்சை தொடர்பாக தமிழக அரசு இதுவரை கொள்முதல் செய்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பான விவரங்கள், அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடும்படி அடுத்த நாளே நான் அறிக்கை வெளியிட்டேன். ஆனால் அரசு அதற்கு பதில் அளிக்காமல் மௌனம் சாதித்தது. அந்த மௌனத்தின் பின்னணியைத்தான் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பு இப்போது வெளியே கொண்டுவந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |