மதகுரு ஒருவர் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் வைத்தும் அது குறித்து பிரதமர் கேட்காததால் சர்ச்சை உருவாகியுள்ளது
பாகிஸ்தானில் எத்சாஸ் டெலிதான் என்ற நிதி திரட்டும் விழா பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது. பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட அந்த விழா கொரோனா தொற்றிலிருந்து நாட்டை காப்பதற்காக நிதி திரட்டும் நிகழ்வாக கருதப்பட்டது. இந்நிலையில் விழாவில் பிரதமர் முன்னிலையில் பேசிய மவுலானா தாரிக் ஜமீல் கொரோனா போன்ற தொற்று வியாதி நாட்டை கஷ்டப்படுத்துவதற்கு பெண்கள் செய்யும் தவறுகள் தான் காரணம் என கூறியுள்ளார்.
அவர் கருத்துக்கு பிரதமர் இம்ரான் கான் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் எனக் கூறும் பெண்கள் அமைப்பு, பிரதமர் மதகுருவின் கருத்திருக்கு மறுப்பு தெரிவிக்காதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களை சாடிய மவுலானா பின்னர் அதற்கு வருத்தம் தெரிவித்தார். இருந்தும் இதுவரை பெண்கள் குறித்து பேசியதற்கு எந்த ஒரு விளக்கமும்அவர் கொடுக்கவில்லை.
பிரபல செய்தி நிறுவனமான டான் தனது தலையங்கத்தில் இதுபோன்ற அறிக்கைகள் கவலை ஏற்படுத்துபவை இது உயர்மட்ட மேடையில் இருந்து வெளிவருவது அதிர்ச்சி ஏற்படுத்தும் காரியம் என கூறியுள்ளது. பெண்களை காயப்படுத்தும் விதமாக பேசிய மதகுருவின் கருத்துக்கள் மேடையிலேயே திருத்தப்படவில்லை என்பது ஒரு அவமானம் என டான் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் மவுலானா பெண்கள் குறித்து தெரிவித்த கருத்திற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளது