கொரோனா பாதிப்பை சமாளிக்க நாடே திணறி வரும் சூழ்நிலையில் மக்கள் கூட்டம் இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தலாம் என பிரபல கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மால்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்களின் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் மூடப்பட்டுள்ளன. ஐபிஎல் உள்ளிட்ட முக்கிய சீசன் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், கொரோனாவை கருத்தில் கொண்டு அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு செயல்படுகின்றனர். இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ரசிகர்கள் கூட்டம் இல்லாத ரஞ்சித் கோப்பை போட்டியை நான் விளையாடி உள்ளேன்.
அதேபோல் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் வீரர்களை வைத்து மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தலாம். குறைந்தபட்ச மக்கள் தங்களது வீட்டில் இருந்தே டிவியில் ஐபிஎல் போட்டியை கண்டு களிப்பார்கள். இதன் மூலம் 144 தடை காலத்திலும் அவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகளே போராடி வரும் சூழ்நிலையில், இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்துப்படி, ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டுமானால், மீண்டும் வெளிநாடுகளிலிருந்து வீரர்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும். இதன் மூலமும் மேலும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று எதிர்மறையான கருத்துக்கள் பரவி வருகின்றன.