தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34 மாவட்டங்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் இன்று 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் ஒரு வயது ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 24 பேர் கொரோனா வைரஸிற்கு பலியாகியுள்ளனர். தற்போது 809 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக அதிகரித்துள்ளது.