Categories
தேசிய செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கிட் வாங்க முன்பணம் எதுவும் கொடுக்கவில்லை… மத்திய அரசு விளக்கம்!

சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், முன் பணம் எதுவும் கொடுக்காததால் இழப்பு எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த கிட்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று மேற்குவங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் புகார் அளித்திருந்தன.

இந்த டெஸ்ட் கிட் முடிவின் நம்பகத்தன்மை வெறும் 5.4% மட்டுமே உள்ளது என புகார் அளிக்கப்பட்டது. மேலும், ஹரியானா மாநிலத்தில், இரண்டு சீனா நிறுவனங்களிடம் சுமார் 1.1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளுக்கான ஆர்டர்களை ரத்து செய்தது. இந்த நிலையில், அதிவிரைவு கருவிகளை கொரோனா தொற்று கண்டறிய 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ கவுன்சில் கூறியிருந்தது.

பின்னர், அதற்கான விளக்கத்தையும் ஐசிஎம்ஆர் வழங்கியுள்ளது. அதில், கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் கிட்டை பயன்படுத்த வேண்டும் என்றும், கொரோனாவை கண்டறிய பிசிஆர் கருவிகள் அவசியம் என குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று சீனாவில் இருந்து பெறப்பட்ட ரேபிட் கிட்களை கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதில், சோதனையில் 2 சீன நிறுவனங்களிடம் பெறப்பட்ட கருவிகள் போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில அரசுகள் இந்த குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்தாதீர்கள் என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. அந்த நிறுவனங்கள் Wondfo bio tech மற்றும் sugai ஆகியவை ஆகும்.

மேலும் மிக அதிக விலைக்கு இந்த டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டதாகவும், இதன் காரணமாக இந்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் குற்றசாட்டு எழுந்தது. இந்த நிலையில், இந்த டெஸ்ட் கிட்களை வாங்க மத்திய அரசு எந்த ஒரு முன்பணமும் கொடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. பழுதான கருவிகளை மாநில அரசுகள், மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

Categories

Tech |