ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்தி கொரோனா தொற்று குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அந்த கருவிகளை இறக்குமதி Wondfo BioTech நிறுவனம் தெரிவித்துள்ளது.
2 சீனா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை கொண்டு இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டது.
மேலும், ரேபிட் டெஸ்ட் கிட்டை மீண்டும் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. இதன்பின்னர், மாநில அரசுகள் கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் எனவும் கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்தது. இந்நிலையில் சீனாவின் Wondfo BioTech உள்பட 2 நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என ஐசிஎம்ஆர் நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில்,
இது தொடர்பாக Wondfo BioTech நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “covid19 நோய்க்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள கருவிகளை இறக்குமதி செய்வதற்கு தங்கள் நிறுவனம் தான் முதலில் அனுமதி பெற்றதாகவும், அதற்கு புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம் ஒப்புதல் அளித்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தரத்திற்கு மட்டுமே தங்கள் நிறுவனம் முன்னுரிமை அளிப்பதாகவும், எங்களது நிறுவனத்தின் பொருட்கள் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளில் ஏற்றுமதி தரத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் கூறியிருப்பதை வைத்து தங்கள் மருத்துவ பரிசோதனை கருவிகள் மீது ஆய்வு செய்து வருவதாகவும், கூடுதல் தகவல்களை விரைவில் பகிர்வோம்” எனவும் Wonfo BioTech நிறுவனம் தெரிவித்துள்ளது.