செங்கல்பட்டில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த வல்லாஞ்சேரி அண்ணா சாலை பகுதியில் வசித்து வந்தவர் ஸ்டீவன்சன். இவருக்கு மூன்று மனைவிகள். கூடுவாஞ்சேரி அருகே டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால், இவர் தனது மூன்றாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட வாக்குவாதம் முற்றி, ஆத்திரத்தில் ஸ்டீவன்சன் கத்தியால் தலையில் குத்தியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பதட்டமடைந்த ஸ்டீவன்சன் தனது இரண்டாவது மனைவியின் மகள் திவ்யாவுக்கு கால் செய்து, உமாவை கொலை செய்து விட்டதாகவும், இதனால் நான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.
இதனால் பீதியடைந்த திவ்யா காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து உமாவின் வீட்டுக்கு ஓடோடி சென்று உள்ளார். அங்கு அவர் செல்வதற்குள் அவரது தந்தை தூக்கில் பிணமாகவும்,உமா ரத்த வெள்ளத்தில் இறந்தும் கிடைந்துள்ளனர். பின் இருவரது உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.