நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக 1,471 நபா்கள் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் அவா்கள் அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பை முடித்துள்ளனா். எனவே தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒன்பது பேரில் 8 பேர் ஏற்கனவே குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஊட்டி காந்தள் பகுதியை சேர்ந்த ஒருவர் குணமடைந்து கோவை மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என தகவல் அளித்துள்ளார். நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட கோத்தகிரியை சோ்ந்த நால்வரும், உதகையை சோ்ந்த மூவரும், குன்னூரை சோ்ந்த இருவருமாக மொத்தம் 9 நபா்கள் கோவையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதனால் கொரோனாவில் இருந்து நீலகிரி மாவட்டம் 100 சதவீதம் மீண்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். விடுவிக்கப்பட்டுள்ள 9 பேரும் 28 நாள்கள் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என்றும், மாவட்டத்தில் புதிய தொற்று ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் தற்போது கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டம் கொரோனா இல்லாதா மாவட்டங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.