அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்துவதா? என அரசுக்கு கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
ஈட்டிய விடுப்புக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையும் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் அறிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு நடைமுறை ஏப்., 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர்.ஆனால் மத்திய,மாநிலஅரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள்
— Kamal Haasan (@ikamalhaasan) April 28, 2020
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமலஹாசன், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர் மோடி. ஆனால் மத்திய,மாநிலஅரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும், தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள்” என குறிப்பிட்டுள்ளார்.