பிளாஸ்மா சிகிச்சை என்பது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை அல்ல. அது இன்னும் சோதனை நிலையில் தான் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை பல இடங்களில் செய்யப்படுகிறது. இருப்பினும் இது ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதன் செயல்திறனைப் படிப்பதற்காக ஐ.சி.எம்.ஆர் தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் மூலமாக நிரூபணம் செய்யப்படும் வரை இந்த பிளாஸ்மா சிகிச்சையை யாரும் மேற்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மேற்கொண்டால் நோயாளிக்கும் சட்டவிரோதத்திற்கும் தீங்கு விளைவிக்கும் எனக்கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 684 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த விகிதம் 23.3 %ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தார். மேலும், ஐ.சி.எம்.ஆர் தனது ஆய்வை முடிக்கும் வரை மற்றும் ஒரு வலுவான அறிவியல் சான்று கிடைக்கும் வரை, பிளாஸ்மா சிகிச்சை முறையை ஆராய்ச்சிகாகவும், சோதனை நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். சரியான வழிகாட்டுதலின் கீழ் பிளாஸ்மா சிகிச்சையை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தான சிக்கல்களையும் ஏற்படுத்தும் என லாவ் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.