விஜயபுரா பகுதியில் வெளிநாட்டுப் பறவையின் உடலில் மின்னணுக் கருவி பொருத்தப்பட்டு இருந்ததை பார்த்த கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக ஏற்கனவே பயத்தில் உறைந்து போயிருக்கும் யம்பத்நல் கிராம மக்கள், மின்னணுக் கருவியுடன் விஜயபுரா பகுதியில் இறந்து கிடந்த புறாவைப் பார்த்து மேலும் அச்சமடைந்துள்ளனர்..
இறந்து கிடந்த அந்த புறாவின் உடலில் இருந்தமின்னணுக் கருவியை கண்ட உடனேயே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மக்கள் அச்சப்பட்டதைப் போல பறவையின் உடலில் கொரோனா தொற்று ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
அதை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகளும் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். புறாவின் உடலில் ரேடியோ டெலிமெட்ரி டிரான்ஸ்மிட்டர் இணைக்கப்பட்டிருந்தது. புறாவின் காலில் கயிறால் கட்டப்பட்டிருந்த அந்த டிரான்ஸ்மிட்டரில் ஒரு ஆன்டெனாவும் இருந்தது.
ஆய்வு நடத்திய பின் வனத்துறை அதிகாரி அஷோக் பட்டீல் கூறுகையில், புறா இயற்கையான முறையில் தான் இறந்து போனது. அந்த புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த மின்னணுக் கருவி சேதமடைந்து போய் இருக்கிறது. ஆய்வு செய்து பார்த்ததில், அந்த டிரான்ஸ்மிட்டர் கருவி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது.
அதிலிருந்த பேட்டரி ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. அதில் எந்த கேமராவும் இல்லை. டிரான்ஸ்மிட்டரில் ஒரு மெட்டாலிக் டேக் இணைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
பொதுவாக அமெரிக்காவில் படிப்புக்காகவும், அரபு நாடுகளில் விளையாட்டுக்காகவும் இந்த டிரான்ஸ்மிட்டர்களை பயன்படுத்துவார்கள். ஆனால் நம்முடைய நாட்டில் இதுபோன்ற கருவிகளை உயிரினத்தோடு இணைப்பது சட்டப்படிக் குற்றமாகும். இதுகுறித்து தற்போது எந்த கருத்துமே கூற முடியாது. விசாரணையில்தான் உண்மை என்ன என்பது தெரிய வரும் என்றும் கூறியுள்ளார்.