சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனோ பாதிப்பு உறுதியாகியுள்ளது. உணவு டெலிவரி ஊழியர் சென்ற வீடுகள், மற்றும் இடங்கள் குறித்து சுகாதாரத்துறை விவரங்களை சேகரித்து வருகிறது.
தற்போது, அந்த 26 வயது இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதே போன்ற சம்பவம் முன்பு டெல்லியிலும் நடந்துள்ளது. அதன் காரணமாக சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்தது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்தியாவசிய கடைகளான காய்கறி, பழங்கள், உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் காலை 6 மணி முதல் மாலை 1 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கமுடியும் என அரசு தெரிவித்திருந்தது. மேலும், உணவு சென்னையில் டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனா ஏற்பட்டது ஆச்சியை ஏற்படுத்தியுள்ளது.