தமிழகத்தில் கொரோனா குறைந்த பச்சைப்பகுதிகளில் விதிகளின் படி தொழில்கள் தொடங்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உணவுக்கு மக்கள் போராடும் நிலை உள்ளது தமிழகத்தில் அந்த நிலை இல்லை என கூறிய அவர், அம்மா உணவகங்கள் மூலம் மக்கள் பசியாறுகின்றனர் என தெரிவித்துள்ளார். மூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பிறமாநில தொழிலாளர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தகவல் அளித்துள்ளார். நோய் பாதிப்பு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மத்திய அரசு பிரித்துள்ளது. கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் சில தொழில்களுக்கு தளர்வு வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும் என்றும் கொரோனா குறைந்த பச்சைப்பகுதிகளில் தொழில் துவங்க அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை பகுதிக்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது.