சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை கடந்த 24ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்தது. சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்துதப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் எனவும் உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா நோய் தோற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்தாலும், தற்போதைய நிலை குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது. அதில், கிராம புறங்களில் இந்த நோய் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த போதிலும், மக்கள் நெருக்கம் மிகுந்த நகர புறங்களில் இந்த நோய் தொற்று தொடர் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது குறித்து மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில், நகர் புறங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே இந்த நோய் தோற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5 மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினார். இந்த பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் ஏதும் செயல்படவில்லை. இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் இன்று இரவுதான் முழு ஊரடங்கு நிறைவு பெறுகிறது.
இதனால் நாளை மட்டும் இந்த 3 மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செய்லபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 1ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகள் வழக்கம் போல செய்யப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் நிதானமாக சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்க வேண்டும் எனவும், வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வர வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.