அமெரிக்காவில் கொரோனா தொற்றால் வேலை இழந்த வெளிநாட்டினர்கள் 2 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
அமெரிக்காவில் குடியுரிமை இல்லாமல் தங்கிப் பணிபுரிவதற்கு மற்ற நாட்டினர் H-1B விசா வைத்துக்கொள்வது வழக்கம். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள் மற்றும் பணியாளர்கள் அதிக அளவில் இந்த விசாவை பெற்று வருகின்றனர். ஏராளமான மக்கள் அமெரிக்காவில் இந்த விசா மூலம் பணியாற்றி வருகிறார்கள். அதோடு இந்த H-1B விசா வைத்திருக்கும் நபர் 60 நாட்கள் மட்டுமே வேலையில்லாமல் அமெரிக்காவில் தங்கி இருக்க முடியும். அதன் பின்னர் அவர்களது தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டியது சட்டமாக உள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமை கேட்டு வரும் 2.5 லட்சம் பேரில் 2 லட்சம் பேர் H-1B விசா மூலம் பணியாற்றி வருபவர்கள். ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில் வேறு வேலை தேடுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதுடன் 60 நாட்களுக்குப் பிறகு காலநீட்டிப்புக்கு அனுமதி வழங்க முடியாது. ஏற்கனவே 30 முதல் 40 நாட்கள் வரை வேலை இல்லாமல் சம்பளம் இல்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் H-1B விசாவில் பணியாற்றும் இந்தியர்கள் தாய் நாட்டிற்கு திரும்பும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள். ஆனால் விமான சேவை இல்லாத பொழுது அவர்கள் எப்படி தாய்நாட்டிற்கு திரும்புவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.