தற்போது கிடைத்த தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31, 787 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,813 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 71 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 31787 பேரில், 22982 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுவரை 1008 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7797 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் குடும்ப நலன் துறை செய்தி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 36வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது, ” கடந்த 3 நாட்களில் இருந்து, நாட்டில் இரட்டிப்பு விகிதம் 11.3 நாட்கள் ஆகும். உலகளாவிய இறப்பு விகிதம் சுமார் 7% என்றாலும், இந்தியாவில் இறப்பு விகிதம் சுமார் 3% ஆக பதிவாகியுள்ளது.
மேலும் இணை நோயுற்ற நபர்களின் இறப்பு சுமார் 86% ஆக உள்ளது என கூறியுள்ளார். நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கீடு விகிதத்தில் சுமார் 0.33% நோயாளிகள் மட்டுமே வென்டிலேட்டர்களிலும், 1.5% நோயாளிகள் ஆக்ஸிஜன் ஆதரவிலும், 2.34% நோயாளிகள் ஐ.சி.யுவிலும் உள்ளனர். இது நாடு முழுவதும் வழங்கப்படும் பராமரிப்பின் தரத்தை பிரதிபலிக்கிறது” என மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.