Categories
உலக செய்திகள்

ஜெர்மனி பில் அனுப்பிட்டாங்க… “சீனா கிட்ட நீங்க எவ்வளவு கேட்பீங்க?”… டிரம்ப் சொன்ன பதில்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா சீனாவிடம் இழப்பீடு கேட்குமா என்ற நிருபரின் கேள்விக்கு டிரம்ப் பதில் அளித்துள்ளார்

சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 4 மாத காலத்திற்குள்ளாக 200 நாடுகளுக்கும் மேல் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளன.. உலகம் முழுவதிலும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்காவின் நிலை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது.. நான்கில் ஒரு பங்கு உயிர்பலி அமெரிக்காவில்தான் நிகழ்ந்துள்ளது.

சீனாவின் மீது குற்றச்சாட்டு

கொரோனா தொற்று குறித்து உண்மையை சீனா தொடக்கத்தில் மறைத்து விட்டதாக இன்றுவரை அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகின்றது. இங்கிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளும் அமெரிக்காவின் இந்த கருத்திற்கு ஒருசேர நிற்கின்றன.. சீனா நினைத்திருந்தால் தொற்றுப் பரவுவது குறித்து வெளிப்படையாக கூறி இருக்க முடியும்.. ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா குறித்து அவர்கள் சொல்லியிருந்தால் உயிர்பலியையும் பொருளாதார இழப்புகளையும் தடுத்திருக்க முடியும் என்று கருதுகின்றன.

இழப்பீடு குறித்த நிருபரின் கேள்வி

இந்நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டன் ரோஸ் கார்டனில் நிருபர்களிடம் பேசி உள்ளார். அதில் நிருபர் ஒருவர் “கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இழப்பிற்காக 130 பில்லியன் யூரோக்கள் கேட்டு ஜெர்மனி சீனாவிற்கு பில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாமே? உங்கள் நிர்வாகமும் இதுபோன்று சீனாவிடம் இழப்பீடு கேட்டு நடவடிக்கை எடுக்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பதில் அளித்த டிரம்ப் 

ஜெர்மனியை விட எளிதானதை  நம்மால் செய்ய முடியும். அதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. இன்னும் இறுதி தொகையை நாம் நிர்ணயம் செய்யவில்லை. ஆனால் நிச்சயமாக அது ஜெர்மனி கேட்ட தொகையை விட பெரிய அளவு தொகையாக இருக்கும்.

சீனாவை பொறுப்பேற்க வைக்கலாம்

உலக அளவில் அமெரிக்காவிற்கு தான் அதிக அளவு சேதம் ஆனால் இது உலகத்திற்கே ஏற்பட்ட சேதம். நான் நிறைய வழிகள் இருக்கின்றது என கூறினேன். இந்த தொற்று தாக்குதலுக்கு சீனாவை பொறுப்பேற்க வைக்கலாம். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் அது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

மகிழ்ச்சி என்பது இல்லை

இப்போது நாம் சீனாவுடன் மகிழ்ச்சியாக இல்லை. ஒட்டுமொத்தமாக எந்த ஒரு மகிழ்ச்சியும் இல்லை. சீனா நினைத்திருந்தால் அனைத்து நாடுகளுக்கும் தொற்று பரவாமல் தடுத்திருக்க முடியும். அவ்வாறுதான் அவர்கள் செய்திருக்க வேண்டும். இதனால்தான் தீவிர விசாரணையை நடத்தி வருகிறோம். தக்க சமயத்தில் இதுகுறித்து தெரிந்து கொள்வீர்கள் என டிரம்ப் கூறினார்

Categories

Tech |