தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்த 25 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 94 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், காஞ்சிபுரத்தில் 3 பேரும், விழுப்புரத்தில் 2 பேரும், திருவள்ளுரில் ஒருவரும் என மொத்தம் 5 மாவட்டத்தில் 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,058 ல் இருந்து 2,162ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையை சேர்ந்த 27 வயது இளம்பெண் மற்றும் 65 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.. அதேபோல தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்தனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,210 ஆக உயர்ந்துள்ளது. இந்த செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.