நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பல்கலைக்கழக மானியக்குழு. யுஜிசி என்று அழைக்கப்படும் இது உயர் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றது. கடந்த வருடம் கூட நாடு முழுவதும் உள்ள இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்ற ஆலோசனையை தெரிவித்தது.
இதற்கு மாணவர் மத்தியிலும், ஆசியர்கள் மத்தியிலும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க 12 பேர் கொண்ட வல்லுனர் குழுவை யுஜிசி நியமித்தது. இந்த குழு இன்று காலை யுஜிசிக்கு சில பரிந்துரைகளை செய்தது. அதில், இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம். கல்லூரிகளில் நடைபெறும் மூன்று மணி நேரம் நடைபெறும் பருவத்தேர்வுகளை இரண்டு மணி நேரமாக குறைக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
அதே போல, ஆன்லைனில் தேர்வு நடத்தலாம், அதே மாதிரி ஓஎம்ஆர் ஷீட் மூலம் தேர்வுகளை எழுதலாம் என்று பல்வேறு பரிந்துரையை யுஜிசிக்கு வல்லுநர் குழு பரிந்துரை செய்திருந்தது. கல்லூரி மாணவர்களுக்கு நுழைவு தேர்வு என்ற தகவல் மாணவர்களை அதிர்ச்சியடையவைத்த நிலையில் தற்போது கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவு தேர்வு நடத்தும் பரிந்துரையை யுஜிசி ஏற்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலையில் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல் தற்போது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.