கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேடு காய்கறி சந்தையை மூன்று பகுதிகளுக்கு பிரித்து மாற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில்லை,
கிருமி நாசினிகள் தெளிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் கோயம்பேடு சந்தையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு கொரோனா தொற்று உள்ளது.
கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ள நிலையில் கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.