சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒரு பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். முறைப்படி அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள டிபி சத்திரம் கல்லறைத் தோட்டத்தில்தான் அடக்கம்செய்யப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, மருத்துவரின் உடல் அண்ணாநகர் பகுதியில் உள்ள வேலங்காடு இடுகாட்டில் புதைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அங்கு சென்ற போது, திடீரென மர்மநபர்கள் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை கல்லால் அடித்து தாக்கத் தொடங்கினர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளையே ஏற்படுத்தியது. இதற்கு, மருத்துவர் சங்கம் தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவர் சைமனின் உடலை மயானத்தில் புதைக்க இரண்டு இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், காவல்துறையின் பாதுகாப்போடு, அவரது உடல் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம், சைமனின் உடலை மீண்டும் எடுத்து கீழ்ப்பாக்கம் சிமெட்ரிஸ் போர்டு கல்லறையில் அடக்கம் செய்ய அவரது மனைவி கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்பது சாத்தியம் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என 14 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.