Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் முதல் முறை பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 53 வயதான நபர் உயிரிழந்துள்ளதாக மும்பை லீலாவதி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 583 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை 10,490 ஆக உயர்ந்துள்ளது. அதில் 7,061 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பை தாராவியில் மட்டும் 396 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 450-ஐ தாண்டியுள்ளது.

மும்பையில் மட்டும் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 180 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 1,773 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்கள் கொரோனாவை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை முறையை மேற்கொண்டன.

அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் இந்த முறை பின்பற்றப்பட்டது. ஆனால் பிளாஸ்மா சிகிச்சை பலனிக்காமல் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னதாக, இந்திய மருத்துவ கவுன்சில் பிளாஸ்மா சிகிச்சை முறையை ஆய்வு நடத்தி வருவதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இந்த முறையை யாரும் பின்பற்ற வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |