தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறி அசத்தியுள்ளது.
தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் குணமடைந்து, 27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், தரமான சிகிச்சை வழங்கி அதிகமானோரை குணப்படுத்தி வீடு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் தொடர்ந்து குணமடைந்து வீடு திரும்பவதால் தமிழகத்தில் சில மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறி வருகிறது. குறிப்பாக ஈரோடில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 70 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து தற்போது தூத்துக்குடியிலும் கொரோனா பாதித்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் 27 பேர் பாதிக்கப்பட்டு நிலையில் ஏற்கனவே 25 பேர் குணம் அடைந்தனர். ஒருவர் இறந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடைசி பெண்ணும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குணமடைந்த பெண்ணை அமைச்சர் கடம்பூர் ராஜீ மற்றும் மருத்துவர்கள் வழியனுப்பி வைத்தனர். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி தற்போது மாறியுள்ளது.