Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – 77, கோடம்பாக்கம் – 97, அண்ணா நகர் – 86 என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வட சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் கொரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது என கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர் ஆகிய 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மண்டல வாரியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,

அதிக பாதிப்பு உள்ள 3 மண்டலங்களில் கண்காணிப்புக்காக 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வயதானவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதியவர்கள் வெளியே செல்வதை தடுக்க இளைஞர்கள் அடங்கிய இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,

முதியவர்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நோய் தொற்றை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதால், பாதிப்பு அதிகம் உள்ள 3 மண்டலங்களில் 10 நாட்களில் கொரோனா பரவல் குறைய வாய்ப்பு என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களில் 100 காலிப்பணியிடங்கள் உள்ளன என பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |