டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சைகள் மூலம் நன்றாக பலன் கிடைத்துள்ளன என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஐசியூ-வில் இருந்த நபர் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,515 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இதுவரை 1,094 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 வயது நபர் கடந்த 4ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் பிளாஸ்மாவை 49 வயது நபரின் உடலில் செலுத்தி சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த சிகிச்சை முறையின் மூலம் அவர், 4 நாட்களில் குணமடைந்ததை அடுத்து வென்டிலேட்டர் உதவியின்றி சுவாசிக்கத் தொடங்கியுள்ளார். இதையடுத்து இன்று, அந்த நபர் பரிபூரணமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். மேலும், பிளாஸ்மா சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.