கரூரில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தநிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து கரூர் வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பாதித்த கடைசி நபரும் நேற்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குணமடைந்த பெண்ணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கரூர் மாவட்டம் கடம்பன் குறிச்சி சின்ன வரப்பாளையம் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்னை ராயபுரம் பகுதியில் 108 ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 24-ம் தேதி கரூரில் உறவினர் ஒருவர் இறந்ததால் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் சென்னையிலிருந்து கரூர் வந்தார்.
இதனிடையே சென்னையில் அவருடன் பணியாற்றிய டிரைவர் ஒருவருக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்களை தேடி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கரூரை சேர்ந்த நபருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த நபர் இதுவரை சந்தித்த நபர்கள், குடும்பத்தினர், உறவினர் ஆகியோருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது.