டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரைகள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,050 லிருந்து 35,043 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,074 லிருந்து 1,147 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 8,325 லிருந்து 8,889 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேரும், குஜராத்தில் 4, 395 பேரும், டெல்லியில் 3,515 பேரும், மத்திய பிரதேசத்தில் 2660 பேரும், ராஜஸ்தானில் 2,584 பேரும், தமிழகத்தில் 2,323 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,203 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கடந்த 27ம் தேதி நடைபெற்ற மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். இந்த நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு, தேர்வு குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.