லண்டனில் பேருந்து ஓட்டுனர் மற்றும் காவல்துறையினர் மீது எச்சில் துப்பி தனக்கு கொரோனா இருப்பதாக கூறி அதிர வைத்த இளைஞருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் வில்லியம் கவ்லி (william cawley) என்ற 23 வயது இளைஞன் பேருந்து கிளம்பும் இடத்திற்கு சென்ற நிலையில், பேருந்துக்குள் ஏறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுனர் அந்த இளைஞனிடம் கொரோனா தொற்றிலிருந்து தப்புவதற்கு சமூக இடைவெளியை கடைபிடித்து இடையில் இருக்கும் பேருந்து கதவைத்திறந்து பேருந்துக்குள் ஏறும்படி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவன் பேருந்து ஓட்டுனர் மீது எச்சில் துப்பினான். இதையடுத்து இந்த சம்பவம் அறிந்து போலீசார் அங்கு வந்து அவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.. அங்கு காவல் நிலையத்திலும் அந்த இளைஞன் கோபமாகவும், மிகவும் மோசமாகவும் நடந்து கொண்டது மட்டுமில்லாமல் காவல்துறை அதிகாரி மீது எச்சில் துப்பி தனக்கு கொரோனா இருப்பதாக கூறி அதிர வைத்துள்ளான்.
இதையடுத்து வில்லியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,அவன் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் வில்லியமுக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி fiona martin கூறுகையில், இந்த தீர்ப்பு எனக்கு மிகவும் திருப்தி அளிக்கின்றது.பாதிக்கப்பட்டவர்கள் பேருந்து ஓட்டுனரோ அல்லது காவல் அதிகாரியோ இதுபோன்ற மோசமான செயலை ஏற்கவே முடியாது. ஒருவரின் மீது எச்சில் துப்புவது மிகவும் அருவருப்பான மற்றும் கேவலமான செயல் என்றும் அவர் கூறினார் .
இதனிடையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பேருந்துகளை தைரியமாக இயக்கும் ஓட்டுநர்கள் ஹீரோவாக பார்க்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மீது இந்த சமயத்தில் எச்சில் துப்பிய சம்பவம் அதிர்ச்சியாக இருக்கிறது என்று சக பேருந்து ஓட்டுநர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.