சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் உடனடியாக காவலரை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை உடனடியாக மூட வேண்டும் என சேலம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களில் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் மொத்தம் 1,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சிவப்பு மண்டல பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாநகராட்சியும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை சேலத்தில் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சேலம் மாநகரம் சத்திரம் அருகே பால் மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் 3 மளிகை கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சமூக இடைவெளி விடாமல் மக்களை நிற்க வைத்து பொருட்களை விற்பனை செய்ததால் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சேலத்தில் தற்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.