தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலகங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கான நடவடிக்கைகள் குறித்தும், சிறு,குறு , நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை அளிப்பது மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் விதித்த கட்டுப்பாடுகள் தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மத்திய அரசு அளித்த தளர்வுகளை பின்பற்ற அமைச்சரவையில் முடிவு என தகவல் அளித்துள்ளனர். ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் கிடையாது என்றும் சிறு குறு தொழில்கள் தொடங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சிவப்பு மண்டலத்தில் 12 மாவட்டங்களும், ஆரஞ்சு மண்டலத்தில் 25 மாவட்டங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.