இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது
கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இனி வரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தாக்குதலை சமாளிக்க அனைத்து நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார். இப்போதைக்கு கொரோனா போகப் போவதில்லை என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் டாக்டர் க்ளுஜ் கூறியுள்ளார். தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிய உலகம் முழுவதிலும் இருக்கும் அறிவியலாளர்கள் முழு மூச்சுடன் களமிறங்கியுள்ளனர். ஆனால் தடுப்பூசி தயாராக இன்னும் பல மாதங்கள் ஆகும் என்றே தோன்றுகின்றது.
உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஐரோப்பிய கூட்டமொன்றில் பேசிய டாக்டர் க்ளுஜ் முதல் கொரோனா முடிவுக்கு வந்தாலும் எதிர் காலத்தில் வர இருக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாவது கொரோனா அலைகளை தடுப்பதற்கு மக்கள் தயாராக இருப்பது மிகவும் அவசியமான ஒன்று என கூறினார். முதல் கொரோனா முடிவடைந்தாலும் அதற்கான சரியான தடுப்பூசி கிடைக்காத வரை அடுத்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள தயாராகும் காலகட்டம் என்றே கருதவேண்டும்.ஐரோப்பாவின் சில நாடுகளில் கொரோனா கட்டுப்பாட்டு தளர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நாடுகளில் பள்ளிகள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரித்தானியாவில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அங்கு கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. சுகாதாரம் தான் பொருளாதாரத்தை வழி நடக்கும் சாரதி எனக் கூறிய க்ளுஜ் சுகாதாரம் இல்லை என்றால் பொருளாதாரம் இல்லை என நாம் கண்ணெதிரே காண்கிறோம் எனக் கூறியுள்ளார். மேலும் சுகாதாரம் இல்லாமல் தேசிய பாதுகாப்பும் இல்லை என்றதோடு அனைவரும் ஒன்றிணைந்து தொற்றிலிருந்து இருந்து போராடி மீண்ட பின்னரும் ஒரு போதும் இது மறக்கக்கூடாத பாடமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.