சகோதர சகோதரிகள் இல்லை என வருத்தப்பட்ட பெண்ணிற்கு முப்பதிற்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இருப்பது தெரியவந்துள்ளது
கனடாவில் ரொரன்ரோ பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு உடன்பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை என வருத்தத்துடன் வளர்ந்து வந்த நிலையில் தனக்கு முப்பதுக்கும் அதிகமான சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்ற உண்மை அறிய வந்ததைத் தொடர்ந்து திகைத்துப் போய் உள்ளார். தனது தாய்க்கு ஒரே மகளாக வளர்ந்து வந்த மாயா கூப்பர்ஸ்டாக் உனக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டால் எனக்கு தங்கையோ தம்பியோ வேண்டுமென கேட்பாராம். ஆனால் இப்போது நீ ஒரே பிள்ளையா எனக்கேட்டால் இல்லை எனக்கு முப்பது சகோதர சகோதரிகள் இருக்கின்றனர் என சொல்லி கேள்வி கேட்பவர்களின் ரியாக்ஷனை மாற்றி விடுகிறார்களாம்.
மாயாவின் தாய் சூ கூப்பர்ஸ்டாக் அமெரிக்கர் ஒருவரிடம் இருந்து உயிரணு தானம் வாங்கி அதன் மூலம் கர்ப்பமுற்றவர். அவர் அதனை மாயாவிடம் மறைத்ததில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு இவ்வாறு தானம் பெற்று பிறந்தவர்கள் பற்றிய ஆன்லைன் டைரக்டரி ஒன்றை மாயா பார்வையிட்டுள்ளார். அதன் மூலம் தனக்கு 32 சகோதர சகோதரிகள் இருப்பதை தெரிந்துகொண்டார் மாயா. தற்போது ஊரடங்கால் வீட்டிற்குள் அடைபட்டு இருப்பதால் போரடித்து நேரம் போகாமல் இருந்த மாயா தனது சகோதர சகோதரிகள் மூவரிடம் குரூப் சாட் செய்துள்ளார். அந்த எண்ணிக்கை வளர்ந்து ஒரு வாரத்திற்குள் 17 ஆக மாறியுள்ளது.
சகோதர சகோதரிகளில் மாயா மட்டும் தான் கனடியர். மற்றவர்கள் 11 வயதிலிருந்து 23 வயது வரை அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே. இவர்களில் பலர் இந்த உறவை நினைத்து மகிழ்ச்சி அடைந்து பிடித்துக்கொள்ள சிலருக்கு இது மிகவும் அதிகமாக இருப்பது போல் உணர்ந்து சாட் குரூப்பில் இருந்து விலகியுள்ளனர். அவர்களது முடிவிற்கு மதிப்பளித்து நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள எப்பொழுது தயாரோ அப்போது உங்களை வரவேற்க ஒரு சகோதர சகோதரிகளின் பட்டாளமே காத்திருக்கும் என மற்றவர்கள் கூறியுள்ளனர்.