பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து 106 வயது பாட்டி மீண்டுள்ளது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில், ஒன்றான பிரான்ஸ் கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடாக திகழ்கிறது. அங்கு 1, 67,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதில், 24,000-த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர்..
இந்நிலையில் அந்நாட்டில் ஓய்வு பெற்றவர்களுக்கான இல்லத்தில் வசித்து வந்த ஹெலன் லெபவ்ரே என்ற 106 வயது பாட்டியையும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கியது. இவருக்கு கொரோனா இருப்பது கடந்த 15 ஆம்தேதி மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் தான் தங்கியிருந்த இடத்திலேயே தன்னை அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த சூழலில் தற்போது அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு குணமடைந்து விட்டார்.
பிரான்சில் 50,000-த்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 106 வயதுள்ள பாட்டி கொரோனாவிலிருந்து மீண்டிருப்பது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது.