Categories
மாநில செய்திகள்

கோயம்பேட்டில் தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் – ராதாகிருஷ்ணன்!

கோயம்பேட்டில் தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராயபுரம் பகுதியில் கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதிக சோதனைகளால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணி போர்கால அடிப்படையில் நடைபெறுகிறது. கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம் என கூறியுள்ளார். மேலும் சென்னை வி.ஆர்.பிள்ளை தெருவில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிவாரணம் வழங்கும் தன்னார்வலர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். மூச்சுத்திணறல், காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கடைகளில் பணியாற்றுபவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கு பொருட்கள் டெலிவரி செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உள்ளதாக ராதாகிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார். திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை சவாலான பகுதிகளாக உள்ளதாகவும், வரும் ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.

மேலும் சென்னையில் நோய் கட்டுப்பாடுப் பகுதிகளில் 25% பேர் முகக்கவசம் அணிவதில்லை, அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என தெரிவித்துள்ளார். சீல் வைக்கப்படாத பகுதியில் கொரோனா தொற்று காரணம் குறித்து தீவிரமாக ஆய்வு நடைபெற்று வருவதாகவும், கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். மூச்சுத்திணறல், காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |