தமிழகத்தில் ஆய்வு செய்த மத்திய குழு இன்று டெல்லி திரும்புகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த தமிழகத்திற்கு மத்திய பேரிடர் மேலாண்மை வாரிய கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு வைத்துள்ளது. சென்னையில் இந்த குழுவினர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தனிமைப்படுத்துபவர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கை வசதிகை பார்வையிட்டனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி முகாமில் மத்திய குழு ஆய்வு செய்தது. ஆழ்வார்பேட்டையில் அமுதம் கூட்டுறவு அங்காடியில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து ஊழியர்களிடம் மத்திய குழு கேட்டறிந்தது.
தண்டையார்பேட்டை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். இதனை தொடர்ந்து ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் மத்திய குழுவினர் கேட்டறிந்தனர். அதன் பின்னர் அம்மா உணவகம், சென்னை கோயம்பேடு சந்தை உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
நடமாடும் காய்கறி அங்காடிகள், வெளிமாநில லாரிகள் வருகை குறித்தும் அதிகாரிகள் மற்றும் விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்தியகுழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற இந்த ஆய்வு நிறைவடைந்துள்ள நிலையில் இன்று மத்திய குழுவினர் டெல்லி திரும்ப உள்ளனர்.
இரண்டு நாட்களில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். மத்திய குழுவின் அறிக்கையின்படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.