இந்தியாவிலே சிறப்பான முறையில் கொரோனா சிகிச்சை அளித்த கேரளா பெருமளவில் கொரோனவை கட்டுப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்றோடு 40 நாளை நிறைவு அடைய இருக்கும் நிலையில், கொரோனவன் பாதிப்பு 40,000த்தை தாண்டியுள்ளதால் கூடுதலாக இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையை நாசமாக்கிய கொரோனா:
இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பின் மையமாக வர்த்தக நகர் மும்பை இருக்கிறது. அங்கு மட்டும் 12,296 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 521 பேர் உயிரிழந்துள்ளது நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மறுபுறத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.
முதலில் பாதிக்கப்பட்ட கேரளா:
இந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மாநிலம் கேரளம். கேரளாவில் இருந்து சீனா சென்று படித்து வந்த மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டத்தையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பான சிகிச்சை பெற்றதன் விளைவாக 3 பேரும் முழுமையாக குணப்படுத்த பட்டு வீட்டிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.
சிறப்பான நடவடிக்கை:
கொரோனா பரவ தொடங்கியது கேரள அரசு பல்வேறு வகையில் நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக கேரள மாநில அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பல நலத்திட்டங்களின் மூலம் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கியது. கேரள அரசின் நடவடிக்கை பல மாநிலத்தின் கவனத்தை ஈர்த்தது, கேரள அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு குவிந்தது. பல மாநிலங்களிலும் கேரளாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை பேசு பொருளாக மாறியது.
அதிக பாதிப்பு:
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா இந்த மூன்று மாநிலங்களும் அடுத்தடுத்து கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. ஒரு நாள் கேரளா மகாராஷ்டிராவை முந்த, மறுநாள் தமிழ்நாடு முந்த, இப்படி ஏற்றம் இறக்கமாக கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் கேரள அரசு கொரோனவை கட்டுப்படுத்த தொடங்கியது.
மாஸ் காட்டிய தமிழகம்:
ஒரு கட்டத்தில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா சரிக்கு சமமாக இருந்த நிலையில் மகாராஷ்டிரா கொரோனாவின் கோர பிடியில் சிக்கியது. இந்திய அளவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்ற வரிசையில் தமிழகம் 6-வது இடத்தில் இருந்து கொண்டு அதிகமானோரை குணப்படுத்திய மாநிலமாக இரண்டாவது இடத்தை பிடித்து மாஸ் காட்டியது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வந்தது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்திலேயே மத்திய அரசிடம் அதிக பரிசோதனை கூடங்களை கேட்டு வாங்கியது. அதேபோல மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்ற நாடுகளில் ஆர்டர் செய்து ஏராளமான மருத்துவ நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வந்தது.
பாராட்டிய பிரதமர்:
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல முன் மாதிரியான சிகிச்சைகளை வழங்கிய அதிகமானோரை குணப்படுத்தி பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வரிடம் தமிழக அரசின் சுகாதார நடவடிக்கைகளை கேட்டறிந்து பாராட்டு தெரிவித்தார்.
ஒடிஷா முதல்வருடன் ஆலோசனை:
இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரபடுத்த்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் காணொளியில் ஆலோசனை நடத்தினார். ஒடிசாவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் எண்ணிக்கை 100க்கும் கீழ் என்ற அளவில் இருந்த போது இந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் கொரோனவை கட்டுப்படுத்த ஒடிசாவில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் கேட்டறிந்தார்.
ஏன் கேரளாவை நாடவில்லை ?
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படும் அண்டை மாநிலமான கேரளா சிறப்பாக செயல்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தும் கேரளவிடமும் தமிழக அரசு ஆலோசனை கேட்டு இருக்கலாம் என்ற கேள்வி விவாதமாக மாறியது.
தமிழகம் – கேரளா உறவு:
தமிழகத்தில் கஜா புயல் வந்த போது தமிழக மீனவர்களுக்கு பெருமளவில் கைகொடுத்து கேரள அரசு. கன்னியாகுமரி மாவட்ட மக்கள் எங்களை கேரளாவுடன் இணையுங்கள் என்ற கோஷத்துடன் போராட்டம் நடத்தியதே அதற்கு சான்று. அதேபோல கேரளாவில் மழை வெள்ளத்தில் வந்தபோது கூட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழில் ட்விட் செய்து தமிழர்களிடம் உதவி கோரினர்.
சகோதரத்துவம்:
தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த போது கேரளா – தமிழகம் எல்லை மூடப்படுகின்றது என்ற வதந்தி வந்த போது கேரள முதலமைச்சர் தமிழகமும் கேரளமும் சகோதரத்துவத்துடன் பழகிவருகின்றது. நாங்கள் ஒருபோதும் அப்படி செய்ய மாட்டோம் என்று விளக்கம் அளித்திருந்தார்.
தவறாய் போன முதல்வர் கணிப்பு :
ஒடிசாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற பார்வையில் தமிழக முதல்வர் கேரளாவை புறம்தள்ளி விட்டு ஆலோசனை நடத்தியது தற்போது தவறாய் போயுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஒடிசாவை விட கேரள மாநிலத்தில் தான் குறைவானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
ஒடிஷாவை அடிச்சு தூக்கிய கேரளா:
தற்போதைய சூழலில் ஒடிசா மாநிலத்தில் 162 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 105 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் ஒடிஷாவை விட அதிகமாக 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கேரளாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.401 பேர் குணமடைந்து 95 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஒடிசாவை விட சிறப்பான சிகிச்சையை கேரளா கொடுத்து வருகிறது என நிரூபித்துள்ளது. கேரளாவைப் போல ஒரு முன்மாதிரியான சிகிச்சை தமிழகத்துக்கும் தேவை படுகின்றது என்பது எதார்த்தமான உண்மை.