பெட்ரோல் – டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தி அரசாணை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால் அரசுக்கான வரி வருவாயும் மிகக் குறைவாகவே இருக்கின்றது. அரசிற்கு அதிகமான வருவாய் கொடுக்கும் டாஸ்மாக் கடைகளும் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய கொரோனா சூழலை தடுக்க தமிழக அரசுக்கு அதிகமான நிதி தேவைப்படுவதால் அதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி வரியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கான வருவாயை மேலும் அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில் தமிழகத்தின் நிதி தேவையை கருத்தில் கொண்டு மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
இதில் பெட்ரோலுக்கான மதிப்புக்கூட்டு வரி 28 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் வரையும், டிசலுக்கான மதிப்புக்கூட்டு வரி 20திலிருந்து 25 %வரை உயர்த்துவதாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை 3.25 காசும், டீசல் 2.50 காசும் உயர்கிறது. இந்த விலையில் மாற்றம் என்பது நாளை முதல் அமுலாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முழு ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளுக்கு முடங்கி இருக்கும் நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பாமர மக்களின் தலையில் இடியாக விழுந்துள்ளது. ஆனாலும் கொரோனவை கட்டுப்படுத்துவது எனபது காலத்தின் கட்டாயமாக இருக்கும் நிலையில் அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.