Categories
உலக செய்திகள்

50 அடி உயரம்… “தியேட்டராக மாறிய விமான நிலையம்”… என்ஜாய் பண்ணும் மக்கள்!

லிதுவேனியாவில் விமான நிலையங்களை தியேட்டர்களாக மாற்றி மக்கள் கார்களில் அமர்ந்து படம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த  ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் 10ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை சில நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. கடைகளுடன் இருக்கும் சிற்றுண்டி சாலைகள், திறந்தவெளி உணவகங்கள் மற்றும் நூலகங்களை திறப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்நாட்டில் சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு விமான போக்குவரத்து இல்லாத காரணத்தினால் வெறிச்சோடி இருக்கும் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி சர்வதேச திரைப்பட விழா நடத்த வில்னியூஸ் நகர சர்வதேச திரைப்பட கமிட்டி முடிவு எடுத்துள்ளது. அதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் 50 அடி உயரத்துக்கு பிரமாண்ட திரை உட்புறமாக ஓடுபாதையையொட்டி  அமைக்கப்பட்டது. இங்கு சர்வதேச திரைப்பட விழா கடந்த புதன்கிழமை  தொடங்கியது.

ஆஸ்கர் விருது பெற்ற  ‘பாரசைட்’  என்னும் தென்கொரிய படம் முதல் படமாக திரையிடப்பட்டது . படத்தை பார்க்க ரசிகர்கள் விமான நிலையத்தின்  ஓடுபாதையில் தங்களது கார்களை நிப்பாட்டியிருந்தனர் . ஒவ்வொரு காருக்கும் இடையே 2 மீட்டர் தூரம் சமூக இடைவெளியாக விடப்பட்டது. அதிலும் ஒவ்வொரு காரிலும் இருவர் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
திரைப்படத்தை பார்க்க ரூ.1,200 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்த திரைப்பட விழா இந்த மாதத்தின் இறுதிவரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக பட விழாவின் அமைப்பாளர் அல்கிர்டஸ் ரம்ஸ்கா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “விமான நிலையம் 10-ந் தேதி திறக்கப்பட்டாலும் கொரோனா பரவலின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் வருவதும், செல்வதும் மிக குறைந்த அளவிலையே இருக்கும். அதனால் இந்த மாதம் முழுவதும் எங்களால் திரைப்பட விழாவை சிறப்பாக நடத்த முடியும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சினிமா தியேட்டராக விமான நிலையம் மாற்றப்பட்டது, திரைப்பட ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Categories

Tech |