ஊரடங்கு சமயத்தில் விதிமுறையை மீறி பப் முன்பு கூடியிருந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பிரித்தானியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வருவதற்கும் பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் சினிமா தியேட்டர், பப், மால் போன்றவை மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கென்ட் கிராமத்திலிருக்கும் ஒயிட் ஹார்ஸ் என்னும் பப்பின் முன்பு அடையாளம் தெரியாத சிலர் ஆயுதங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைக்கப்பெற்ற காவல் அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆயுதங்களுடன் பப்பை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது அரைகுறை ஆடையுடன் ஒருவர் கைகளை உயர்த்தியபடி போலீசார் முன் வந்து நின்றுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து 2 பெண்கள் உட்பட 8 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். மேலும் பப் திறந்திருந்ததா? இந்த எட்டு பேரும் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைக்கு பின்னரே தெரியவரும். அதுமட்டுமில்லாமல் கைது செய்யப்பட்டவர்களிடம் எந்த ஆயுதங்களும் இல்லை எனவும் அவர்களுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பப்பை காவல்துறையினர் சுற்றி வளைப்பதும் அவர்களுடன் இருந்த போலீஸ் நாய் விடாமல் குறைப்பதும் வீடியோவாக பதிவாகி வெளியாகியுள்ளது