இந்தியாவில் 42 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,553 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 72 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 41வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன.
இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,533 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,373 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 548 பேரும், குஜராத்தில் 290 பேரும், மத்திய பிரதேசத்தில் 156 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 11,707 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 12,974 பேரும், குஜராத்தில் 5,428 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 4,549 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,846 பேரும், தமிழகத்தில் 3,023 பேரும், ராஜஸ்தானில் 2,886 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,645 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதாக மத்திய அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. மேலும், நாட்டில் உள்ள பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மாவட்டங்களில் என்னென்ன ஊரடங்கு தளர்வுகளை மேற்கொள்ளலாம் என்பதையும் மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.