தற்போது பாதிப்பு கண்டறியபடுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை என வருவாய்த்துறை செயலாளரும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என தெரிவித்தார். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்”.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் என 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை கோயம்பேட்டில் ஆய்வு நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதேபோல, வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.