Categories
அரசியல்

“2 பேரும் அரசியலை தள்ளி வைங்க”… இலவசமாக உணவு வழங்குங்க… ஓங்கி குரல் கொடுத்த டிடிவி!

அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து முதலில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் இரண்டாவது முறையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.. 2ஆம் ஊரடங்கின் போது, சென்னையில் இயங்கும் அனைத்து அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவு இலவசமாக  வழங்கப்பட்டு வந்தது. இதனால் தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டை பெற்றது.. ஆனால் தற்போது அரசின் நடவடிக்கை விமர்சனத்தை பெற்று வருகிறது.

அதாவது, இன்றைய நாளில் இருந்து 14 நாட்களுக்கு 3ஆம் கட்ட , ஊரடங்கு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மா உணவகங்களில் மீண்டும், பழையபடியே உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வழக்கம் அமலுக்கு வந்திருக்கிறது… இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மே 17 ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இலவசமாக உணவு அளிக்கப்பட்டுவந்த அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அம்மா உணவகத்துக்கு நிதி தருவதுபோல நாடகமாடி ஏழைகளின் பசியை அரசியலுக்காகப் பயன்படுத்த நினைத்த அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இப்போது வாய்மூடி மௌனியாக இருப்பது அந்த இருவரையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி இருக்கிறது. இந்த அரசியலை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு, ஊரடங்கு காலம் முடியும் வரையிலாவது அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க தமிழக அரசு இன்றே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |